Wednesday 21 January 2015

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இரண்டாவது சுற்றில் நடால் வெற்றி !

ரஃபேல் நடால்                    [ படம் உதவி : பென் சாலமன் ]
மெல்பர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப்போட்டியில்    உலகின் மூன்றாம் நிலை வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால்   வெற்றி பெற்றார்.

இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப்போட்டியில் அவர்,  உலகின் 112ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டிம் ஸ்மைசெக் கை சந்தித்தார்.

முதல் ஆட்டத்தை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் நடால் எளிதாக வென்றபோதும், அடுத்த இரண்டு ஆட்டங்களை ஸ்மைசெக் சிறப்பாக விளையாடி 6-3, 7-6 என்ற புள்ளிக்கணக்கில் வென்றதால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது.

ஆட்டத்தின் இடையே நடாலின் இடது காலில் வலி ஏற்பட்டதால் எளிதில் வெல்லக்கூடிய பல புள்ளிகளை கோட்டை விட்டார். மூன்றாவது ஆட்டத்தில் 5-4 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றிருந்த போது, எளிதில் அந்த ஆட்டத்தைக் கைப்பற்றியிருக்க வேண்டிய நடால் காலில் ஏற்பட்ட வலியால் அந்த ஆட்டத்தை பறி கொடுத்தார்.

பிறகு மருத்துவர் வந்து சிகிச்சை அளித்த பிறகே நான்காவது ஆட்டத்தை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் நடாலால் வெல்ல முடிந்தது.

ஸ்மைஸ்செக், தான் உலகின் மூன்றாம் நிலை வீரரோடு ஆடுகிறோம் என்ற பதற்றம் சிறிதுமின்றி இயல்பாக விளையாடினார்.

இவர் புள்ளிகள் பெற்றபோது துள்ளவும் இல்லை, புள்ளிகளை இழந்தபோது துவளவும் இல்லை. மொத்தத்தில் ஒரு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் எனில் மிகையில்லை!

ஐந்தாவது ஆட்டத்தில் 5-5 என்று இருவரும் சமநிலையில் இருந்தபோது நடால் அற்புதமாக விளையாடி 6-5 என்ற முன்னிலை பெற்றார்.

நிறைவு ஆட்டத்தில் 3 ஆட்டப்புள்ளிகளை நடால் பெற்ற போதும் மிக மோசமாக அவற்றை நழுவ விட்டார்.

ஆனாலும் சுதாரித்து ஆடி நான்காவது ஆட்டப்புள்ளியை வென்று, 6-2, 3-6, 6-7, 6-3, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்று மூன்றாவது சுற்றில் நுழைந்தார்.

இவர் ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் வாகையர் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- இராசேந்திர உடையார்

ஸ்போர்ட் நியூஸ் இந்தியாவிற்காக..






ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இரண்டாவது சுற்றில் சரபோவா வெற்றி !

மரியா சரபோவா                      [ படம்: பென் சாலமன் ]
மெல்பர்ன் :  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப்போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை, ரஸ்யாவின் மரியா சரபோவா வெற்றி பெற்றார்.

இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப்போட்டியில் அவர் அதே நாட்டைச்சேர்ந்தவரும், உலகின் 150ஆம் நிலை வீராங்கனையுமான அலெக்ஸாண்ட்ரா பனோவா வை சந்தித்தார்.

மலையும் மடுவும் மோதிக்கொள்வதைப்போல தோன்றினாலும் பனோவாவின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்ததை மறுக்க இயலாது. ஒரு கட்டத்தில் 1-6, 6-4, 4-1 என மிக முன்னிலை பெற்று, நிச்சயமாக சரபோவாவை வென்றுவிடுவார் என்று எண்ணியபோது, சரபோவானின் அனுபவம் அவருக்கு கை கொடுத்தது.

அதற்க்குப்பின் சுதாரித்து ஆடிய சரபோவா, பனோவாவின் அனுபவமின்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.

இதனால் எப்படியும் தோற்றுவிடுவார் என அனைவரும் நினைத்த வேளையில் சரபோவா போராடி 6-1, 4-6, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, மூன்றாம் சுற்றுக்குத்தகுதி பெற்றார்.

-  இராசேந்திர உடையார்
ஸ்போர்ட் நியூஸ் இந்தியாவிற்காக

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இரண்டாவது சுற்றில் ஃபெடரர் வெற்றி !

                                           ரோஜர் ஃபெடரர்  படம்: பென் சாலமன்
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில், உலகின் இரண்டாம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றில் நுழைந்தார்.

இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில் இவர் இத்தாலியின் சைமன் போலேல்லியுடன் மோதினார்.

மிக சுறுசுறுப்பாக விளையாடிய போலெல்லி முதல் ஆட்டத்தை மிக எளிதாக 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வசமாக்கினார்.

ஆனால் அதன்பிறகு விழிப்புடன் ஆடிய ஃபெடரர் அடுத்த மூன்று ஆட்டங்களை 6-3, 6-2, 6-2 என எளிதாக வென்றார்,

இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் மூன்றாம் சுற்றுப்போட்டிக்கு ஃபெடரர் தகுதி பெற்றார்.

இவர் ஏற்கனவே நான்குமுறை ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வாகை சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்போர்ட்நியூஸ் இந்தியாவிற்க்காக

- இராசேந்திர உடையார்.

Friday 24 January 2014

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நடால் வெற்றி..!


மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ரஃபேல் நடால் உள்ளங்கை காயத்தை பொருட்படுத்தாது அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று மெல்பர்ன் நகரின், ராட் லெவர் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரர், ஸ்பெயினின், ரஃபேல் நடாலை எதிர்த்து ஆறாம் நிலை வீரர், ஸ்விட்சர்லாந்தின், ரோஜர் ஃபெடரர் களமிறங்கினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்போட்டி இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் 33ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெற்ற 32 போட்டிகளில் நடால் 22 முறை வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த முறை ரஃபேல் நடாலின் இடது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டிருந்ததால் ரோஜர் பெடரரே வெல்வார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. "இந்த காயம் இப்படியே இருந்தால் இறுதி ஆட்டத்தில் ஆடுவது கனவே" என நடால் போட்டிக்கு முன்னர் தெரிவித்திருந்திருந்ததும் ஃபெடரர் வெல்வார் என்ற நம்பிக்கையை அதிகரித்திருந்தது. ரஃபேல் நடால் இடது கை ஆட்டக்காரர் என்பதால் இந்தகாயம் மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
நடால் கையில் ஏற்பட்ட காயம்..
ஆனால் இந்த தடைகளை எல்லாம் துச்சமென நினைத்து.. மனதில் உறுதியுடன் களமிறங்கிய நடால் முதல் ஆட்டத்தை 7-6 என்ற புள்ளிகளில் போராடி வென்றார். இரண்டாவது ஆட்டத்தின் பாதியில் அவர் உள்ளங்கை கட்டு அவிழ்ந்துவிட , கையில் ரத்தம் கசிந்தது. மீண்டும் காயத்திற்க்கு மருந்திட மருந்துவ இடைவெளி கொடுக்கப்பட்டது, புதிய கட்டுடன்  ஆட வந்த நடால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஜர் ஃபெடரரும் தனது முன்கை ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கவே.. ஆட்டம் சூடு பிடித்தது.

ஃபெடரரின் முன் கை ஆட்டத்திற்கு நடால் வாய்ப்பு வழங்காமல், ஃபெடரரின் இடது கை பக்கமாகவே பந்தை அனுப்பியதும், இரண்டு மூலைகளிலும் அளவெடுத்து அடிப்பது போல மிகச்சரியாக பந்தை திருப்பி அனுப்பியதும் நடாலின் அனுபவத்தைக்காட்டியது. இதன்மூலம் இரண்டாவது ஆட்டத்தை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் நடால் வென்றார்.

மூன்றாவது ஆட்டத்தை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் ஃபெடரரும், இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்புக்காக நடாலும் களமிறங்க, ஆட்டம் மீண்டும் விறுவிறுப்பு  அடைந்தது.

ஒருவொருக்கொருவர் சளைக்காமல் ஆடினாலும் ரஃபேல் நடால்  மூன்றாவது ஆட்டத்தையும் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

இது அவருடைய உடல் பலத்தைவிட, அனுபவத்தைவிட, மனபலத்திற்க்கு கிடைத்த வெற்றி எனில் அது மிகையில்லை. 

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நடால், ஃபெடரர் மோதல்.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப்போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் ரோஜர் ஃபெடரரும்  ரஃபேல் நடாலும் மோத இருக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பரம வைரிகள் மீண்டும் களம் காணுகின்றனர். இவர்களுக்கிடையில் இதுவரை நடந்த 32 போட்டிகளில் நடால் 22 போட்டிகளில் வென்றிருக்கிறார்.

இந்த அரையிறுதி ஆட்டமும் மற்றுமோர் சிறந்த ஆட்டமாக இருக்கப்போகிறது என்பதில் ஐயமில்லை. எனினும், 2007 - 2010 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இருவரும் ஆடிய வேகமும், ஆட்டத்திறனும் இப்போது இருக்கிறதா? என்பது கேள்விக்குறிதான்

இதற்கு காரணம் நடாலின் இடது உள்ளங்கையில் ஏற்பட்டுள்ள காயமும், ஃபெடரரின் அண்மைய ஆட்டங்களும். ஃபெடரர் மீண்டும் தனது முன் கை ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியதை கடந்த ஆட்டங்களில் பார்க்க முடிந்தது.

அதே வேளையில், தன்கையில் காயம் இருப்பது தனது கவனத்தை சிதைக்கிறது என்றும், காயம் தொடர்ந்து இருக்குமாயின் இறுதி ஆட்டம் ஒரு கனவாகிவிடும் என்று நடால் கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஒருவரை ஒருவர் வீழ்த்த என்ன வியூகம் வகுக்கப்போகின்றனர், இருவரின் ஆட்டமுறையும் எந்த விதத்தில் வேறுபடப்போகிறது, யாருக்கு எது பலம், எது பலவீனம் என்ற கேள்விகளுக்கிடையில் இருவரின் வயதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதையும் தவிர்க்க முடியாததாகிறது.

இவர்கள் இருவரும் கடந்தகாலங்களின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்றாலும்.. பல முன்னனி வீராங்கனைகளை மண்ணைக்கவ்வ வைத்த கனடாவின் 19 வயது யூஜெனி புட்சர்டும், முன்னனி வீரர்களை வீழ்த்தி, முதல் முறையாக க்ராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் இறுதிப்போட்டியில் களம் காணும் வாவ்ரின்காவும், பல புதிய கேள்விகளை நம்முள் எழுப்புகிறார்கள்.

எது எப்படியோ! மற்றுமொரு கண்ணுக்கு விருந்தளிக்கும் அற்புதமான அரையிறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Wednesday 4 December 2013

உலக கோப்பை கபடி: இந்திய அணி வெற்றி

 
பாட்யாலா: ஸ்பெயின் அணிக்கு எதிரான உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெற்றி பெற்றது.

பஞ்சாப் மாநிலத்தில், 4வது உலக கோப்பை கபடி தொடர் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 

தனது முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்திய இந்திய ஆண்கள் அணி, நேற்று நடந்த லீக் போட்டியில் ஸ்பெயின் அணியை சந்தித்து. இதில் அசத்தலாக விளையாடிய இந்திய அணி 55-27 என வெற்றி பெற்றது. நாளை நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, கென்யாவை எதிர் கொள்கிறது.

பெண்கள் "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, கென்யாவை 56-21 என எளிதாக வென்றது. வரும் 7ம் தேதி நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணியை சந்திக்கிறது.


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Sunday 6 October 2013

பைனலில் போபண்ணா ஜோடி

டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி தகுதி பெற்றது. 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜப்பான் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி, பிலிப்பைன்சின் டிரிட், பிரிட்டனின் டாமினிக் ஜோடியை 6-4, 7-6 என சுலபமாக வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது .

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக